என் வாழ்க்கை முன் போல் இல்லை - ரா.கிருஷ்ணவேணி

 "என் திருப்புமுனை பயணம் "

முன்னுரை :

    நான் பிறந்த இந்த மண்ணின் மைந்தர்கள் யாவரும் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்ற தாய்மை உணர்வோடு இக்கட்டுரையை எழுதுகிறேன். நான் இந்த மண்ணில் கோடிக்கணக்கான செல்களோடு போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்து என் தாயின் வயிற்றில்  இந்த பூமியில் ஒரு மனிதராக பிறப்பேன் என்று கருவாகி உருவானவள் .

 இந்த உலகத்தில் பார்த்து, ரசித்து, விரும்பியதை அடைந்து, ஆனந்தமாக விளையாடப் போகிறேன் என்று நான் வாழப்போகும் சமுதாயத்தையும், இயற்கையையும் மண்டியிட்டு வணங்கி பிறந்தவள். ஆயிரமாயிரம் ஆசையோடும் கற்பனைகளோடும் பிறந்த எனக்கு அனைத்து ஆசைகளும் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டு நிராசையாக ஆக்கிவிட்ட என் சமூகத்தை வெறுப்பேனா? நேசிப்பேனா? என்று எனக்கு தெரியவில்லை.

 சாதுவாக இருந்த என்னை "சாது மிரண்டால் காடு கொள்ளாது " என்று பல சோதனைகளும், வேதனைகளும் கொடுத்து என்னை பக்குவப்படுத்திய என் சமூகத்தைவெறுப்பேனா? நேசிப்பேனா?.  என் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை பயணத்தையும், எண்ணக் குமுறல்களையும், கொதிப்புகளையும், ஆதங்கங்களையும் இதில் வெளிப்படுத்துகிறேன்.நோயுற்று சிதைந்து போன எனது வசந்தகாலம்:

      என பெயர்  அக்குஹீலர் கிருஷ்ணவேணி B.SC acu    நான்  +2 படித்துக் கொண்டிருக்கும்போது 16 வயதில் அப்பா அவர்கள் திடீரென்று என்னுடைய அனுமதி இல்லாமலேயே திருமணம்  விவசாய குடும்பத்தில் என் அத்தை பையனுக்கு பேசி முடித்துவிட்டார்கள்.எனக்கு சிறுவயதில் இருந்தே ஏதாவது ஒரு பட்டயம் படிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் நான் அம்மா, அப்பாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை விருப்பம் இல்லாமலேயே திருமணமும் முடிந்தது. திருமண வாழ்க்கைக்கு முன் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த நான் திருமண வாழ்க்கைக்கு பின் என் வாழ்க்கையே நீண்ட நோயுற்ற பயணமாக மாறியது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து முரண் காரணமாகவும், மன உளைச்சலாலும், அதிக சிந்தனை, தூக்கமின்மை, கவலை, மாமனார் மாமியார் கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போராட்ட வாழ்க்கையினாளும் என் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து வந்தது . என் மனதில் தான் பிரச்சனை ஆனால் என் உள் ளுறுப்புகளை பாதித்து ஆரம்பத்தில் பசியின்மை, தூக்கமின்மை ,வாந்தி கிறுகிறுப்பு ,உடல் சோர்வு, வலி இந்தமாதிரி தொந்தரவுகள் இருந்தது அந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் அதனால்தான் இந்தத் தொந்தரவு என்று சொல்லிவிட்டார்கள்.

 குழந்தை பிறந்த பின்பும் அந்த தொந்தரவுகள் கூடியதே தவிர குறைந்தபாடில்லை. அதற்குப் பின் அலோபதி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் பரிசோதனை டெஸ்டில் ஒரு நோயும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் தொந்தரவு இருந்துகொண்டேதான் இருக்கும் எனக்கு மனதில் பிரச்சனை உள்ளதை எந்த டெஸ்ட் மெஷினால்தான் அளவீடு செய்ய முடியும்? மறுபடியும் மற்றொரு மருத்துவரிடம் சென்ற போது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று சொன்னார்கள். இப்படியே மூன்று வருடம் ஆறு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வந்தும் நோய் தீர்ந்தபாடில்லை. மாதக்கணக்கில் மருத்துவமனையில் Bed லிருந்து அப்புறம் மூட்டு வலி, கை வலி என்று வந்து விட்டது அதற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தேன். இந்த நிலையிலேயே அடுத்த ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. ஒரு செம்பு கூட தூக்க முடியாத நிலையில் இருந்தேன்.       

 தற்கொலை முயற்சிவர என்னை அழைத்துச்சென்ற  முடக்குவாத நோய்:

குழந்தையை கூட ஒரு ஐந்து நிமிடம் வைத்திருக்க முடியாது. கை வலிவந்துவிடும் துணி துவைக்க முடியாது. நீண்ட நேரம் நிற்க முடியாது. பைக்கில் அரை மணி நேரம் கூட உட்கார்ந்து போகமுடியாது.குறுக்கு பகுதியிலும், தோள்பட்டையிலும் வலி வந்துவிடும் விவசாய குடும்பத்தில் இருந்து கொண்டு என்னால் வீட்டு வேலைகளைக்கூட செய்ய இயலாமல் குழந்தைகளையும் கவனிக்க கூட இயலாத நிலை ஏற்பட்டது. மாமியார், கணவர் குடும்பத்தார்கள் அனைவரும் நோயாளியை திருமணம் செய்து வந்து விட்டோம் என்று ஆரம்பித்து சண்டையும் சத்தமுமாக  சில நாள் மன உளைச்சலில் போனது.

 ஒரு மாதத்திற்கு 3,500 ரூபாய்க்கு மாத்திரை. அந்த மாத்திரைகளை சாப்பிட்ட உடன் தூக்கம், தூக்கமாக வந்துவிடும். ஒரு கட்டத்தில் மிகவும் ஒல்லியாக இருந்த என் உடல் திடீரென்று பருமனாக ஆகிவிட்டது. அதன்பின் மூச்சிரைப்பு எலும்பு மூட்டுகள் அனைத்திலும் வலியும் வீக்கமும் ஏற்பட்டது அலோபதி மருத்துவத்தில் பல மருத்துவர்களும் மீண்டும் பரிசோதனை செய்து எனக்கு "முடக்குவாதம்" என்ற நோயை  பரிசாக வழங்கினார்கள். இந்த நோயை தீர்க்கவே முடியாது. சாகும் வரை மாத்திரை சாப்பிட வேண்டும். வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டார்கள்மருத்துவர்கள்.

 அதற்குப் பின் என் கணவர் வீட்டில் இருந்தும் நோயை உன் அம்மா வீட்டில் போய் இருந்து நோய் தீர்ந்த பின்பு வா என்று என்னை மட்டும் அம்மா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அம்மா வீட்டிலும் ஒருவரிடம் சிகிச்சை பார்த்துவிட்டு சலிப்பு ஏற்பட்டு வெறுக்க ஆரம்பித்தார்கள். என்னை நானே கவனித்துக் கொள்ளக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு மனம் தன்னம்பிக்கை இழந்து இருந்தது .அப்புறம் நானாகவே சென்று ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இரண்டு மாதம் Bed ல் அங்கேயே தங்கிவிட்டேன். இதற்கிடையில் மூன்று முறை என் மனம் பிரச்சனையை எதிர்கொள்ளும் சக்தி இழந்து தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு விட்டேன்.

 என் திருப்புமுனை பயணம்:

   ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் இருக்கும் பொழுதுதான் எனக்கு விடிவுகாலம் காத்துக் கிடந்தது என்று எனக்கு தெரியவில்லை. என் மன காயத்திற்கும், உடல் பிரச்சினைக்கும் நன்றி சொல்லும் அளவிற்கு ஒரு அற்புதம் கிடைக்கப் போகிறது என்பது எனக்கு அந்த நேரம் தெரியவில்லை. நான் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு வயதான அம்மா ஏம்பா உன்னை பார்க்க யாருமே வர மாட்டேங்கிறாங்க என்று கேட்டார்கள் அந்த கணம் தான் உணர்ந்தேன் நான் எவ்வளவு யாருக்குமே வேண்டாத, குழந்தைகளையும் பார்க்க முடியாமல் என்னை நானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உறவுகளாலும், சமுதாயத்தாலும் ஒரு நோயாளியாக ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளேன். என்று நினைத்து என் நிலையை எண்ணி கண்ணீர் கணக்கில்லாமல் கரைபுரண்டோடியது. மகிழ்ச்சியாகதுள்ளிக் கொண்டிருந்தேன் திருமண வாழ்க்கைக்கு முன். திருமணத்திற்கு பின் மகிழ்ச்சி என்பது எட்டாக்கனியாக மருந்து மாத்திரை ஊசி மருத்துவமனை நோய் மட்டுமே வாழ்க்கையாக துக்கம் நிலைகொண்டு இருண்ட காலமாக பயணிப்பதே நினைத்து தன்னம்பிக்கை இழந்து, உள்ளுறுப்பு பலவீனப் பட்டதால் யாருக்குமே தேவையில்லாத நான் இனி யாருக்காக இத்தனை நோயோட வாழனும் என்று மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, அழுதுகொண்டு இருந்த போது ,

இந்த நிலையில்தான் என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்கப்போகிறது என்று நான் அன்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இந்த நொடியில் இருந்து தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை பயணமாக தொடங்கியது ஒரு வயதான அம்மா கடவுள் மாதிரி வந்து சொன்னார்கள். கம்பம் என்ற ஊரில் "அக்குபங்சர்" என்ற மருத்துவத்தில் ஒரு ஊசியை வைத்து குத்து வாங்களாம் ஆனால் சரியா போகுதாம் என்று ஊர்ல சொல்லிக்கிட்டாங்க நான் பார்த்ததில்லை என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அதற்குப் பின்புதான் சாகிறது சாகப்போகிறோம் கடைசியாக அக்குபங்சர் மருத்துவத்தை பார்த்துவிட்டு சாவோம் என்று என் மனம் சொல்லியது. அதற்குப்பின் போஸ்K. முகமது மீரான் சார் அவர்களின் அக்குபங்சர் சிகிச்சை இல்லத்திற்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அக்குபங்சர் சிகிச்சைக்குப்பின் மொத்தமே நடக்க முடியாத நிலைக்கு வலி வந்து வீட்டில் தவழ்ந்து கொண்டிருப்பேன். எனக்கு மருத்துவமனையில் போஸ்சார் ஒரு புத்தகம் கொடுத்திருந்தார்கள். அப்புத்தகத்தில் வலி கூடி தான் குறையும் என்று இருந்தது. அதனால் வைராக்கியமாக அவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு இருந்தேன். பின் படிப்படியாக உடல் மெலிந்து ஒருவருட சிகிச்சைக்கு அப்புறம் வலி குறைந்து ஒரு கட்டத்தில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த நிகழ்வு நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.        தீராத நோயை தீர்த்து விட்ட இந்த உன்னத மருத்துவத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு அக்குபங்சர் சிகிச்சை இல்லத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அன்வர் அண்ணன் அவர்களிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன் நான் +2 தான் படித்திருந்தேன். டிகிரி படித்தால் தான் அக்குபங்சர் மருத்துவம் படிக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

 ஒரு நாள் அதே அன்வர் அண்ணன் நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பி கேட்டீர்கள் ஆரோக்கிய நகரம் என்று" ஐந்து நாள் அக்குபங்சர் பயிற்சி" இலவசமாக கம்பம் அகாடமி ஆப் அக்குபங்சர் என்ற அமைப்பிலிருந்து கம்பத்தில் நடத்துகிறார்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி ஒரு ரசீது கொடுத்தார்.

 நான் ஐந்து நாள்  ஆரோக்கிய நகரம்  என்ற இலவச பயிற்சியில் கலந்து கொண்டேன். என்  வாழ்வில்

சிறப்பான மாற்றம்:

   நான் நோயில் இருந்து விடுபட்டாலும் , முன்போல் என் வாழ்க்கை இல்லாமல் சிறப்புற்று வாழ்வதற்கான திருப்புமுனை பயணத்திற்கு கிடைத்த விடிவெள்ளிகளாக எனக்கு அக்குபங்சர் சிகிச்சை கற்றுக்கொடுத்த போஸ்K. முகமது மீரான் அவர்களும்

.உமர் பாரூக் அவர்களும் என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷங்கள். அவர்கள் வகுப்பு எடுக்கும் போதே என் மனம் அத்தனையும் உண்மை உண்மை என்று உள்வாங்கியது ஐந்து நாள் வகுப்பிலேயே அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வித்தையை, மிக எளிமையான உடல் பற்றிய ரகசியத்தை நான் கற்றுக் கொண்டபோது ஊரெல்லாம் யார்கிட்டயாவது சொல்லனுமே என்று என் சிந்தனையில் ஓடியது.

  நோயாளியாக இருந்த நான் மருத்துவராக என் பாதை விரிந்தது:

  அக்குபங்சர் மருத்துவராக ஆகியவுடன் எனக்கு கிடைத்த முதல் நோயாளி எய்ட்ஸ் (HIV) நோயால் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் தூக்கி வந்தார்கள். அக்குபங்சர் சிகிச்சை அளித்த மறு வாரத்திலேயே நல்ல மாற்றம்.கிட்டத்தட்டஆறு மாதத்திற்குள்ளேயே இறந்து போவதாக அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட ஒரு நோயாளி இன்று ஒன்பது ஆண்டுகள் ஆனபின்பும் ஆரோக்கியமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு பின்பு தான் எனக்குள்ளேயே ஒரு தன்னம்பிக்கை பிறந்தது. மருந்து கண்டுபிடிக்கப்படாத குணமாக்க முடியாது என்று அலோபதி மருத்துவத்தால் கூறி கொண்டிருக்கின்ற நோய்க்கு அக்குபங்சர் மருத்துவத்தில் தீர்வு கிடைக்கும் போது மற்ற நோய்கள் எல்லாம் சர்வசாதாரணமாக குணமாக வாய்ப்பிருக்கு என்று புரிந்துகொண்டு நிறைய வித விதமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தேன். பின்னர் நோயாளிகள் எண்ணிக்கை கூடவும் அக்குபங்சர் டிப்ளமோ Bsc என்று படித்தேன். என்னுடைய அனுபவத்தில் பெண்கள்தான் அதிக மூட்டு வலி தோள்பட்டை வலி என்று அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பின்னணியை விசாரிக்கும் போது அதிக மன உளைச்சலாலும், குடும்ப கட்டுப்பாடுகளின் இறுக்கத்தாலும் மனம் பாதிக்கப்பட்டு பெரும்பாலும் உடல் பாதிக்கப்பட்டவர்களாகவே உணருகிறேன். ஆனால் அலோபதி மருத்துவத்தில் உடல் உபாதைகளுக்கு மட்டும் தான் சிகிச்சை கொடுக்கிறார்கள். உடல் பிரச்சினைக்கு மூல காரணமாக இருக்கின்ற "மனப் பிரச்சனைக்கு" என்ன செய்வது? என்று அதற்கு தீர்வு கொடுப்பதில்லை.

எனக்கு எதனால் உடல் ஆரோக்கியம் இழந்து இருந்தேன் என்பது அக்குபங்சர் மருத்துவத்தை கற்றுக்கொண்டதினால் புரிந்து கொண்டேன் "மனம் தான்" அடிப்படை காரணம் என்று இல்லை என்றால் நானும் புரியாமல் தான் மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பேன். இப்போதும் மன பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஆனால் அந்த பிரச்சனைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்று இருக்கிறது என் மனம். உடல் சரியாகும் போது மனமும் குணமடைகிறது என்பதை நான் இந்த மருத்துவத்தின் வாயிலாக உணர்ந்து கொண்டேன்.

  "உடலே மருத்துவர் உரையும், சிறப்பம்சமும்;"

 இன்றுவரை என் மனதில் ஓடுவது எல்லாம் என்னைப்போல் எத்தனை பேரோட வாழ்க்கை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்களோ! இப்படிப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றமடைந்து வாழ்வதற்கான இயற்கை வாழ்வியலை எனக்கு மறுவாழ்வு கொடுத்த அக்குபங்சர் மருத்துவம் எனும் பாக்கியத்தை என் உயிர் உள்ள வரை என்னால் முடிந்த அளவு எவ்வளவு மக்களுக்கு கொண்டு சேர்த்து என் நன்றிக்கடனை தீர்க்க போகிறேன் என்பதை என் என் வாழ்நாள் கடமையாக ஏற்று முடிந்தவரை கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி தேனி மாவட்டம், மதுரை மாவட்டம் பகுதிகளில்  மனிதன் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியமாக வாழ  4 விதிகள் போதும் என்பதை 

1.  பசித்து புசி  (பசித்தால் மட்டும் அளவோடு சாப்பிடுவது time பார்த்து மூன்று நேரமும் சாப்பிடாமல் அவரவர் உழைப்பிற்கு ஏற்றாற்போல் வயிற்றை கவனித்து சாப்பிடுவது நன்று.

 2.அவரவர் உழைப்பிற்கேற்ற போல் வெயில், மழை காலம்சூழ்நிலைக்களுக்கு ஏற்றாற்போல் " தாகம்" எடுக்கும்போது தண்ணீர் குடிப்பதும் ,(லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்து சிறுநீரகத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்)

3. உடல் "ஓய்வு" கேட்கும் போது ஓய்வு கொடுப்பதும்,( உடல் வலித்தாலும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு தொடர்ந்து வேலை செய்வது உடலுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும் கடினமான உழைப்பு இருக்கும் பட்சத்தில் ஓய்வு அவசியம் என்பதையும்)

4.   "தூக்கம்" நம் முன்னோர்கள் விளக்கு வைப்பதற்கு முன்பே தூங்கிவிடுவார்கள். நாம் அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு ஒன்பது மணிக்காவது தூங்க வேண்டும்  என்று நான்கு விதிகளை கடைப்பிடித்தால் "உடல் தன்னை தானே சரி செய்து கொள்ளும்"

 காய்ச்சல்,சளி மற்றும் நமக்கு வரும் தொந்தரவுகள் நோய் அல்ல.உடல் கழிவுகள் வெளியேற்றம்."நோய் நீக்கத்தைத்தான் நோய்" என்று சொல்லுகிறோம். உடல் தொந்தரவான நேரங்களில் உடலுக்கு ஓய்வும், வயிறை பட்டினி போடுவதும்தான் சிறந்த வைத்தியம். மொத்தத்தில் ரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொண்டு சிறு நோயை தடுத்து பெரிய நோயாக மற்றொரு நோயை உருவாக்கிக் கொள்ளாமல் உடலை கவனித்து "சும்மா இருப்பதே சுகம்"  "எந்த மருத்துவமுமே தேவையில்லை"(அக்குபங்சர் உட்பட)  என்று உடல் பற்றிய இயங்குதலின் ரகசியத்தை "உடலே மருத்துவர்" ‌என்ற தலைப்பில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்   நோய்   வருமுன் தடுக்கும் முயற்சியாக என் ஆத்ம திருப்தியாக, எனக்கான கடமையாக நன்றியுணர்வோடு தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருக்கிறேன்.

  அக்குபங்சர்கிளினிக்;

    நோயாளி யாக இருந்த நான் உசிலம்பட்டியில் அக்குபங்சர் சிகிச்சை கொடுக்கும்கிளினிக் வைத்து அலோபதி மருத்துவத்தால் கைவிடப்பட்ட வரும் அநேக நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கும் மருத்துவராக என்நிலை உயர்ந்திருக்கிறது.

"என்வாழ்க்கை முன்பு போல் இல்லை"என் வாழ்கை மாற்றம்;

    அதுமட்டுமல்லாது கல்லூரி வாசமே இல்லாத நான் பேராசிரியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கை வாழ்வியல் பற்றிய உன்னத உண்மையை வகுப்பெடுக்கும் பாக்கியம் கிடைத்திருப்பதை எண்ணி மிக சந்தோஷத்தோடு பயணிக்கிறேன். ஆசிரியர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும், உறவுகள் மத்தியிலும்  நல்ல ஒரு வரவேற்க்கும் வகையிலும், தீண்டத்தகாதவளாக நோயாளியாக ஒடுங்கிக் கிடந்த என்னை இன்று அனைவரும் மதிக்கும் அளவிற்கு சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலைக்கு இயற்கை என்னை உயர்த்தி இருக்கிறது என்பதை எண்ணி தினமும் பூரிப்படைகிறேன். அதுமட்டுமல்லாது என் வாழ்க்கையில்  அக்குபங்சர்கிடைப்பதற்க்கு முன்பு விவசாய குடும்பம் என்பதால் 50 லட்சம் வரைக்கும் கடன் தொல்லையால் பல இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்தேன். அதுவும் உடலும், மனமும் சரியாகும் போது நற்செயல்கள் செய்வதன் அடிப்படையில் ஆசீர்வாதங்கள் நிரம்பி வாழ்க்கைச் சூழலும் மாறி வங்கிக் கடன் தள்ளுபடி ஆகி விவசாயமும் லாபத்தை கொடுத்து 50 லட்சம் கடன் தொல்லை நீங்கி நல்ல முன்னேற்றமான வாழ்க்கை உருவாகி இருக்கிறது. நோயினால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியே கெதி என்று ரசாயனங்களை உட்கொண்டு என் பண்புகளை இழந்து என் வாழ்க்கையை இழந்து நின்ற எனக்கு திருப்புமுனையாக அமைந்தது "அக்குபங்சர் என்ற பரிசுத்தமான மருந்தில்லா மருத்துவமும்"

    "நமக்கு வழங்கப்பட்ட தெல்லாம் மற்றவர்களுக்கு வழங்குவதற்கே" என்றும், "இறைக்கின்ற கிணறுதான் ஊறும்" என்றும் அறிவுரைகள் வழங்கி எனக்குள் பரந்த நோக்கத்தினை விதைத்து "மருத்துவமே இல்லாத சமுதாயம் "உருவாக்குவோம் அனைவருக்கும் இந்த நல் மருத்துவத்தை கொண்டுபோய் விதைப்போம். என்று நல்வழி காட்டிய அக்குபங்சர் மருத்துவத்தை கற்றுக்கொடுத்த அன்பிற்கினிய ஆசான்  போஸ் K.முகமது மீரான் அவர்களும்,

  பல தளங்களிலும் தன்னார்வலராக உண்மைத் தன்மையோடு "save world without drugs" என்ற நல் நோக்கத்தை மையமாகக் கொண்டு என்னைப் போன்ற பல அக்குபங்சர் மருத்துவர்களை இணைத்துக் கொண்டு, "

நம்மை உருவாக்கி கொடுத்த இந்த சமூகத்திற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்து நன்றி கடன் செய்யவேண்டும்". என்ற நல் நோக்கை எங்கள் மனதில் விதைத்தும்,

 விஷத் தன்மையான மருந்துகளை உட்கொண்டு விஷத்தன்மையாகவே சிந்திக்கின்ற, நோயினால் அவதியுற்று ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து நிற்கின்ற , உலகத்தில் உள்ள கடைசி நபர் வரைக்கும் அக்குபங்சர் என்ற மருந்தில்லா மருத்துவத்தையும் "எந்தவொரு மருத்துவமே தேவைப்படாத சமுதாயத்தையும்" உருவாக்க வேண்டும் .என்று எங்களுக்கு எல்லாம் முன்னோடியாக வழிகாட்டிக் கொண்டிருக்கிற எனது அன்பிற்கினிய அக்குபங்சர் மருத்துவத்தை   கற்றுக்கொடுத்த  ஆசான்அ.உமர்பாரூக் அவர்களும் கிடைக்கப்பெற்றதேயாகும்.இவர்களின் தொடர் வழிகாட்டுதலினால் "என் வாழ்வு முன்புபோல் இல்லை" மருத்துவர், எழுத்தாளர், கல்வெட்டியல் என்று மேலும் பல தளங்களில் என் வாழ்வு சிறப்புற்று விளங்குகிறது என்றால் எல்லா புகழும் எனக்கு அருளிய இறைவனுக்கும், அக்குபங்சர் மருத்துவத்திற்கும் எனது ஆசான்களுக்குமே போய் சேரும். அவர்களுக்கு கோடி கோடி நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்து, "ஞான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக" என்று என் விருப்பத்தை பதிவு செய்து என் அனுபவ கட்டுரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்🙏.

-ரா.கிருஷ்ணவேணி

கம்பம்.


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

3 Comments

  1. இருளிலிருந்து வெளிவந்துள்ள நீங்கள், நிறைய மக்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியிருப்பதன் உங்கள் வாழ்வையும் பொருளுள்ளதாக மாற்றியுள்ளீர்கள். வாழ்த்துகள் தோழர்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தோழர், வாழ்க்கை எப்ப வேண்டுமானாலும் பிடித்த மாதிரி மாறும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வாழ்க்கை.

    ReplyDelete
  3. கட்டுரையில் சிறப்பாக அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள். வாழ்த்துகள்..நன்றி மேடம்.

    ReplyDelete
Previous Post Next Post