நானும் என் வாசிப்பும் - முனைவர் சி.அம்சவேணி

  

நானும் என் வாசிப்பும்

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய சஞ்சாரம் எனும் நூலினை எனது நண்பர் ஒருவர் வாசிக்க கொடுத்தபோது பெரிய ஆர்வம் இல்லாமல் தான் வாங்கினேன் நாவலின் தொடக்கம் சூலக்கருப்பசாமி கோவில் திருவிழா குறித்த நிகழ்வுகளாக இருந்தது கோவிலுக்கு மேளம் நாயனம் வாசிக்க வந்த ரத்தினம் பக்கிரி இருவரையும் திருவிழா குழுவினர் வம்புக்கு இழுத்தது, அங்கிருந்த ஒருவர்  நீங்க எல்லாம் சாதாரண கலைஞர்கள் தானே என்று அடித்தைப் படிக்கும்போது மனம் மிகவும் வலித்தது. அதுபோன்ற கதையைத்தான் நாவல் முழுக்க எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லி இருப்பார்களோ என நினைத்தேன். ஆனால் நான் நினைத்ததற்கு மாறாக ஒரு பெரிய இசை சாம்ராஜ்ஜியத்தின் வரலாறுகளை வரிசைப் படுத்தி இருந்தார் நாவலாசிரியர்.


பக்கிரி தான் இந்த இசை நாவலின் நாயகன்  சேக்கிழார் எப்படி சுந்தரர் கதையை வைத்து மற்ற அடியார்களின் கதைகளை  பெரியபுராணமாக எழுதினாரோ அப்படித்தான் நாவலின் கதை பக்கிரியை வைத்து ஆரம்பமாகிறது. அவனுடைய இசை ஆர்வம் அவன் நாதஸ்வரம் கற்ற சூழல்கள் சித்தேரி மடம் ,இசைக்காக வெளிநாட்டவர் உடன் நட்பு இசையை த் தன் உயிர் மூச்சாகக் கொண்ட அவன் ஊர் ஊராக தன் உயிருக்கு பயந்து சுற்றிய கதை இவற்றையெல்லாம் அடிநாதமாக கொண்டு ஒரு பெரும் இசை சாம்ராஜ்யத்தை பல இசைக்கலைஞர்களின் கதைகளை நாவலுக்குள்  பொதித்து வைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். "வாசிப்பில் ஆழ்ந்து போய் விட்டால் உடனே இல்லாமல் போய் விடுகிறது என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான்" என்று நாவலாசிரியர் பக்கிரியின் இசை ஆர்வத்தை குறிப்பிடுகிறார்.

அவன் ஒரு இடத்தில் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது அந்த இசையில் மெய்மறந்து கேட்ட ரசிகர்கள் அத்துணை பேரும் கண்களில் நீர் வழிய நின்றிருந்தனர் என்ற செய்தியில் இசை எவ்வளவு மென்மையானது, அந்தக் கலைஞனின் திறமை எப்படி பாராட்ட வேண்டும் என்பதெல்லாம் நமக்கு உறைக்கிறது. பக்கிரி யும் ரத்தினமும் திருவிழாவில் சண்டை காரர்களிடம் இருந்து தப்பித்து கொடுமுடி போய்ச் சேர எண்ணுகிறார்கள்,  அதன் தொடர்ச்சியாக அவர்கள் ஒரு லாரியில் ஏறி பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ரத்தினம் உறங்கிப் போய் விடுகிறார் பக்கிரி விழித்துக் கொண்டிருக்கிறான். முதல் கதையாக அரட்டானம் இலட்சய்யா என்பவருடைய கதை ஆரம்பமாகிறது. மாலிக்காபூர் காலத்தில் கோயில்கள் சூறையாடப்படுகிற சமயத்தில் தன்னைக் கொன்றாலும் பரவாயில்லை இந்த கோவிலை விட்டு வரமாட்டேன். இறைவனுக்கு இசை வாசிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் முக்கியமில்லை என்று இறுமாப்புடன் இருந்த அந்த கலைஞனை மாலிக்காபூர் சந்திக்கும் போதும் அவன் இசை குறித்து கேட்கும் போதும் மாலிக்காபூர் அடைந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் இறுதிவரை செல்லுகிறது வடநாட்டில் நாதஸ்வர இசை ஒரு போதை தரும் இசை என்று நம்பிக் கொண்டிருப்பதாக நாவலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் .

இந்த கதைகளை எல்லாம் வாசிக்கும் போது நாதஸ்வரம் என்ற இசைக்கருவி இவ்வளவு சக்தி வாய்ந்ததா என்ற வியப்பு என்னுள் எழாமல் இல்லை. திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் யாருமே அதிகம் ரசித்து கேட்காத நிலையில் ஒரு ஓரமாக வாசிக்கப்படும் இந்த இசைக்கா...(!?) இவ்வளவு பெரிய மகத்துவம் இதனை எல்லாம் அறியும் போது மனம் பிரம்மிக்கிறது.

அடுத்ததாக ஓதியூர் கண்ணுசாமி நாயனக்காரர் என்ற நாதஸ்வர இசைக் கலைஞனின் கதை 200 வருடங்களாக ஓதியூர் சிவன்கோவிலில் நாயனம் வாசிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர் இந்த கண்ணுசாமி நாயனக்காரர் தனிக் கச்சேரியாக நாதஸ்வரத்தை வாசிக்கும் முறையை இவர்தான் அனேகமாக கொண்டுவந்தார் எனவும், இவர்தான் அந்த ஊரில் நாயனம் வாசித்து ,பணம் சம்பாரித்து, முதல் மாடி வீடு கட்டியவர் என்று அறியும்போது இன்றைய காலகட்டத்திலேயே நாதஸ்வர மற்றும் மேளக் கலைஞர்களுக்கு அவ்வளவு ஊதியம் தரப்படுவதில்லை. இந்த மனிதருக்கு எப்படி இவ்வளவு சொத்து சுகம் வந்தது என்றால் அவருடைய வாசிப்பைக் கேட்டு மயங்கிய ஒருவர் அவரை பரோடா மன்னரின் சபைக்கு அழைத்து சென்று வாசித்து வைத்தார் என்ற செய்திகள் எல்லாம் இதில் உண்டு .அதனோடு அவருடைய பெருந்தன்மை குணத்தையும் நாம் சொல்லியே ஆகவேண்டும் ,ஜமீன்தார் வீட்டு கல்யாணத்தில் வாசிக்க அவருக்கு அழைப்பு வந்தது .ஆனால் அதே நாளில் வேறு ஒரு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என மறுத்த கண்ணுசாமி நாயனக்காரர் தன்னுடன் ஒத்து ஊதும் தங்கவேலு மகள் திருமணத்திற்கு சென்று நாயனம் வாசிக்கிறார் .அவ்வளவு பெரிய அழைப்பை மறுத்து விட்டு தன்னுடன் பணியாற்றிய அந்தக் கலைஞன் வீட்டிற்கு சென்று வாசிக்கும் அவரது பெருந்தன்மை என்னை சில்லிடச் செய்கிறது. அவர் சிறந்த புரட்சி கலைஞராக இருப்பார் போலும் ,சாதியும் மதமும் கரிசல் நிலத்தில் வேரோடி இருந்த காலத்திலும் செருப்புத் தைக்கிற கருப்பையா விற்கு நாதஸ்வரம் கற்றுக் கொடுத்தாராம் இந்த செய்தியை படிக்கும் போது இசைக்கு மொழி மட்டுமல்ல ஜாதி, மதமும் கிடையாது என்பது உண்மை தான் ஆகிறது .

இதை நிரூபிக்கும் வண்ணமாக நடுக்கோட்டை அபு இப்ராகிம் சாகிப் என்கிற முகமதிய மதத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு கண்ணையா என்ற இசைக்கலைஞன் நாதஸ்வரம் கற்றுத்தந்த கதை இருக்கிறது ஒவ்வொரு கதையையும் படிக்கப் படிக்க ஆர்வம் மேலிடும் எழுத்துநடை  எஸ்.ரா அவர்களின் உடையது .

கரிசல் குளம் கிராமத்தில் முன்னொரு காலத்தில் ஊரோடி பறவைகள் என்ற பறவைகள் இருந்ததாம் அந்த பறவைகளின் வரலாற்றையும் நாதஸ்வர இசைக்கும் ஊரோடி பறவைகளின் ஒலிக்கும் இருந்த ஒற்றுமைகளையும் இந்த நாவல் விவரமாக எடுத்துச் சொல்லி இசை இயற்கையில் இருந்து உருவாகிறது என்பதை நிரூபணம் செய்கிறது.

தாசிகள் பணக்காரர்களின் பட்டியலில் இருந்த காலத்தில் அவர்களின் நடனத்துக்கு மட்டுமே துணை வாசிப்பாளர்களாக அதிகம் இசைக்கலைஞர்கள் இருந்த நேரம் தெக்கரை சாமிநாத பிள்ளை நாதஸ்வர இசையைக் கேட்டு தாசி கமலம் தன்னுடைய நகைகள் அத்தனையும் கழற்றி தந்ததோடு சரணாகதி அடைந்தாள் என்ற செய்தி வியப்பே . கூடவே மேலையூர் தன்னாசி என்ற கண்தெரியாத நாயனக்காரர் வரலாற்றைப் படிக்கும்போது நம்மோடு சக காலத்தில் அவர்கள் வாழ்கிற அனுபவத்தை தன்னுடைய எழுத்து நடையால் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர்.

ஊமை அய்யர் இசை குறித்த எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் தன்னுடைய அனுபவ அறிவாலும் இசை ஆர்வத்தாலும் ஒரு இசை எப்படி இருக்க வேண்டும் என்று சிறந்த விமர்சகராக ,ஒரு நடுநிலைவாதியாக அவர் இருந்த செய்திகள் படிக்கும்போது இசை என்பது கடவுளின் வரம் அதற்கு ஜாதி மதம் மொழி எனக்கு எதுவும் கிடையாது என்பதை மாற்றுத்திறனாளி இசைக்கலைஞர்களை பார்க்கும்போதும் அவர்களை படிக்கும்போதும் உணர முடிகிறது .சாதி குறித்தான பார்வை கரிசல் நில மக்களிடம் எப்படி இருக்கிறது ,என்பதை இந்த கதையின் மூலமாக அறிந்து கொள்ளலாம். தண்ணீர் குடிப்பதற்கு கூட இந்த கிணற்றில் தண்ணி எடுக்க வேண்டுமா நீ என்ன சாதி? என இயல்பாக கேட்கிற பழக்கம் அங்கே உண்டு. மாடு மேய்க்கிற ஒரு சிறுவன் இசையில் பெரிய ஆளாக வருவதும், ஒரு வீட்டில் திருடிச் சென்ற ஒருவனுக்கு ஏழு வீட்டு சோறு என்னும் புதுவித தண்டனையை தருவதும், கரிசல் நில மக்களின் இயல்பைக் காட்டுகிறது.

இந்த கதையின் ஒவ்வொன்றும் கரிசல் நில மக்களின் வாழ்வு ,விவசாயம்,பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. வேப்பங்காடு கிராமம் புதுக்குடி கிராமம் என ஊர் பெயர்கள் அத்தனையும் கரிசல் நிலம் முழுவதும் ஆசிரியர் பயணம் செய்ததற்கு சாட்சி. இந்த நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்துப் படித்தேன். நாவலை முடிக்கையில் மோகனம் கரஹரப்ரியா நீலாம்பரி என நிறைய ராகங்களின் பெயர்கள் நம் பேச்சுவாக்கில் வர ஆரம்பிக்கும். இசை நம்மை ஆட்டுவிக்கும். இனி எங்கே ஒரு நாதஸ்வரத்தை பார்த்தாலும் நின்று அதன் இசையை ரசிக்க மனம் ஏங்கும். நீங்களெல்லாம் இசைக்காக ஒரு பயணம் போக வேண்டுமா ! நிச்சயம் வாசியுங்கள் "சஞ்சாரம்" எனும் இந்த இசை பாரம்பரிய நாவலை...

நன்றி.

-முனைவர் சி.அம்சவேணி


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


நானும் என் வாசிப்பும் - முனைவர் சி.அம்சவேணி நானும் என் வாசிப்பும் - முனைவர் சி.அம்சவேணி Reviewed by receiverteam on February 22, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.