என் வாழ்க்கை முன் போல் இல்லை - சிறப்பு கட்டுரை

 




என் வாழ்க்கை முன் போல் இல்லை

நம் சமுதாயத்தில் எழுதப்படாத விதி ஒன்று உண்டு; இங்கு வெற்றி பெறுபவர்கள் மட்டுமே கொண்டாடப்படுவர். எவ்வளவு கடினமாக முயன்று தோல்வியுற்றாலும், தோற்பவர்களுக்கு வரலாற்றில் இடமிருப்பதில்லை.

எந்தவொரு திரைப்படமும், புத்தகமும் தோல்வியை முடிவாக கொண்டிருந்தால், அவற்றை நாம் கொண்டாடுவதில்லை. எத்தனையோ திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்தை, கதாநாயகன் கொன்று வீழ்த்துவது போல் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால், கதாநாயகர்களை கொன்று வீழ்த்துவது போன்ற காட்சிகள் அமைவது மிகச் சொற்பமே!  

திரைப்படங்களிலும், கதைகளிலும் கதாநாயகர்கள் வெற்றி பெறுவதாகவே முடிவுகள் இருந்தாலும், நிதர்சனத்தில் இங்கு தோல்விகள் ஏராளம். தோல்விகளை ஏற்று கொண்டு அடுத்த நிலைக்கு முன்னேறுவதும், தோல்விகளை கடந்து களத்தில் சோர்வடையாமல் நிற்பதும் மிகப் பெரிய வெற்றி என்பதை ஏனோ நாம் மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதற்கு தவறிவிட்டடோம்.

என் வாழ்வில நான் அவ்வாறு சந்தித்த வெற்றியாளரை (சமுதாயத்தின் பார்வையில் ஒரு தோல்வியாளரை) பற்றியும், அவரை சந்தித்த பின்பு என் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்துவிட்டு, சராசரி இளைஞர்களை போல் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு, கடிவாளம் போட்ட குதிரை என வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்த தருணம். கல்வி, வேலை, திருமணம் என பொதுவான வாழ்க்கை பயணத்தை அனுபவிக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை போலும்.

       பணியில் அமர்ந்த ஓராண்டிற்குள் தந்தையின் உடல் நலம் சரியில்லாமல் போகவே, வேலையை விட்டுவிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்ப வேண்டிய சூழ்நிலை. 6 மாதங்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைவீடுமருத்துவமனை என அலைந்து கொண்டிருக்க, தந்தையின் உடல் நலம் தேர்ச்சி பெறவே, வேலை தேடி மீண்டும் சென்னை வர வேண்டிய நிலை.

திடீரென்று ஒரு நாள் மாலை, நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வருகிறது; நம் குழுவில் ஒரு செய்தி பகிரப்பட்டிருக்கின்றது, அதனை படித்தாயா? என கேட்கிறார். நண்பரை காத்திருக்கு சொல்லிவிட்டு, நான் தன்னார்வலராக பணியாற்றி வரும் அந்த அமைப்பின் குழுவில் பகிரப்பட்ட செய்தியை படிக்கின்றேன்.

படித்து முடித்ததும், மற்ற தகவல்கள் குறித்து நண்பரிடம் வினவுகிறேன்; ‘சரி சகோ, அந்த செய்திக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? தாங்கள் என்னிடம் அழைத்து கேட்பதற்கு நோக்கம் என்ன?’ நண்பரின் பதில் சிறு திகைப்பை அளிக்கின்றது; ‘இல்லை விஜய், நீங்கள் தான் இந்த பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும்; உங்களால் மட்டுமே இந்த உதவியை செய்ய இயலும், மறுத்துவிடாதீர்கள்என்கிறார்.  யோசித்து பதில் அளிப்பதாக கூறி இணைப்பை துண்டிக்கிறேன்.

ஏன் அந்த பொறுப்பை ஏற்று கொண்டேன் என இன்று வரை எனக்கு பதில் கிடைக்கவில்லை; ஆனால், அந்த ஒற்றை முறைசரிஎனக் கூறியது வாழ்க்கையின் மீது நான் கொண்ட பார்வையை, வெற்றி என்பதற்கு நான் கொண்ட அர்த்தத்தை முற்றிலும் மாற்றியது!

எனது ஊருக்கு அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிறு கிராமம்; அந்த கிராமத்தை விட்டு அதிகம் வெளிவந்திடாத ஒரு பெற்றோர்! ஏதேனும் கூலி வேலைக்காக ஆட்களை எங்கள் நகரத்திற்கு அழைத்து வரும் போது, அந்த கிராமத்தின் வழியே கடந்து செல்லும் ஒரு மஞ்சள் நிற சிறிய பேருந்தில் (Mini Bus) வருடத்திற்கு ஒரு சில முறை மட்டும் அந்த குடும்பத்தின் தலைவர் தன் கிராமத்தை விட்டு வெளியே வருவதுண்டு.

ஆம், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் ஒவ்வொரு நாடாக வலம் வரும் பணக்காரர்களுக்கு மத்தியில், தன் கிராமத்தை விட்டு 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் பயணிக்காத சில மனிதர்களை கண்டவுடன் எனக்கும் சற்று வியப்பு தான். வறுமை வாட்டி வதைக்க, உல்லாச பயணங்கள் செல்வதெற்கெல்லாம் வாய்ப்புகள் ஏது?

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி மற்றும் 3 மகன்கள் என சற்று பெரிய குடும்பம்; தாத்தா, பாட்டி இருவருக்கும் வயதாகிவிடவே, மொத்த குடும்பச் சுமையும் தந்தையின் தலை மேல். முதல் 2 மகன்களும் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்கள் (சுருக்கமாக கூற வேண்டுமெனில் 20 வயதை கடந்த குழ்ந்தைகள்). மூன்றாவது மகனுக்கு உடல் வளர்ச்சி இல்லையெனினும், கல்லூரி செல்லும் அளவிற்கு மன வளர்ச்சி பெற்றிருந்தது வாழ்க்கையின் மீது அவர்களுக்கு சிறு நம்பிக்கையை அளித்தது.

கூலி வேலைக்கு செல்லும் நேரம் போக, மாலை மற்றும் இரவு நேரங்களில் வீட்டிற்கு அருகே தான் வைத்திருந்த பட்டறையில் மண்வெட்டி, அரிவாள் போன்ற சாதனங்கள் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார் அந்த பெரியவர். 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் தாக்கத்தால் தனது பட்டறை சேதமடைந்துவிடவே, காய்ச்சி போன தன் கைகளின் இரும்புத் தன்மையை போன்று, இதயத்தையும் வலுவாக்கிக் கொண்டு உழைத்து கொண்டிருந்தவருக்கு ஓர் பேரிடி!

கல்லூரி சென்று கொண்டிருந்த தனது மூன்றாவது மகனுக்கு பார்வை மங்கலாக தெரிய, அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்கின்றனர். அந்த கல்லூரி மாணவனின் மூளையில் சிறு கட்டி ஒன்று உருவாகி, நாட்கள் நீள, நீள சற்று பெரிதாகி, இரு கண்களுக்கும் செல்லும் நரம்புகளை பாதித்துவிடுகின்றது; பார்வை கிடைப்பது கடினம், உயிரை காப்பாற்றி கொள்ள விரும்பினால் உடனே சென்னை அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு மகன்களின் எதிர்காலம் கேள்வி குறியாகி போனதை விட, தங்களின் நம்பிக்கை ஒளியிழந்து இருளை நோக்கி செல்வதை அந்த பெற்றோர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. யாரிடமாவது உதவி கோர வேண்டும்; ஆனால் யாரிடம் கேட்பது? தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்லாத ஒருவர், சென்னை சென்று மருத்துவ உதவிகளை பெற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தங்கள் குடும்பத்தில் எழுத, படிக்க தெரிந்த ஒரே நபர், தற்பொழுது கண்பார்வையை இழந்திருக்கும் தனது மூன்றாவது மகன்.

அந்த ஊரின் தபால் அலுவலகத்தில் பணியாற்றிய எனது நண்பருக்கு செய்தி கிடைக்கவே, நாங்கள் பயணிக்கும் ஓர் தன்னார்வ குழுவிடம் இதனை எடுத்து கூறுகிறார். முன் பின் அறிமுகமில்லாத ஒருவரின் மருத்துவத்திற்காக சென்னை செல்ல வேண்டும் என்பதை விட, காலை முதல் இரவு வரை அவர்களுடன் மருத்துவமனையிலேயே தங்க வேண்டும் என்ற சிந்தணை பல தன்னார்வலர்களை சிந்திக்க வைத்தது.

மருத்துவமனையின் வாடையே சிலருக்கு ஒவ்வாத பொழுது, சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அறிமுகமாகாத ஒருவருடன் தங்க வேண்டும் என்ற விண்ணப்பம் பலருக்கும் தயக்கத்தை அளிக்க, சிலருக்கு பணி சுமை தடங்கலாக அமைய, வேலை தேடிக் கொண்டிருக்கும் நான் கடந்த 6 மாதங்களாக தந்தையின் மருத்துவத்திற்காக மருத்துவமனையில் தங்கி பழகிய காரணத்தால், 2 வாரங்கள் அவர்களுக்கு துணையாக சென்னை செல்ல வேண்டிய கட்டாயம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது.

பெற்றோரின் அரவணைப்பில், வாழ்வின் துன்பங்களை நுகராத ஓர் சராசரி இளைஞனான எனக்கு இது ஒரு புதிய கோரிக்கை; வேறு யாராலும் நேரம் ஒதுக்க முடியாமல் போகவே, செல்வதாக ஒப்புதல் அளிக்கின்றேன். முதன் முறையாக, அந்த பெற்றோர் இருவரையும், அந்த மாணவனையும் தொடர் வண்டி நிலையத்தில் சந்திக்கின்றேன்.

மறு நாள் சென்னை சென்றடைந்து, அந்த அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவரின் எண்ணுக்கு அழைக்கின்றேன்; அவரின் உதவியுடன் உள்நோயாளியாக அந்த மாணவனை அனுமதிக்கின்றோம்; பெற்றோர் மட்டுமே தங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்படவே, இரவு 8 மணி வரை உடன் இருந்துவிட்டு வடபழனி அருகே இருக்கும் நண்பரின் அறைக்கு செல்கிறேன்.

காலை 5.30 மணிக்கு எழுந்து குளித்து விட்டு, தயாராகி 7.30 மணிக்குள் மருத்துவமனை செல்கிறேன்; முழு நாளும் அந்தச் சிறுவவனின் அருகில் இருந்து மருத்துவர்களிடம் உரையாடுவதும், ஸ்கேன் செய்வதற்கு அழைத்து செல்வதும், மருந்துகளை வாங்குவந்துமென 20 நாட்கள் ஓடிவிடுகின்றன.

தீவிர அறுவை சிகிச்சை முடிந்து, தலையில் இருந்த கட்டி அகற்றப்பட ICU வார்டிற்கு அந்தச் சிறுவனை மாற்றுகின்றனர்; தந்தைக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் உள்ளதாக ஊரிலிருந்து அழைப்பு வருகிறது! மாற்றாக நண்பர் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டு வீடு செல்கிறேன்.

ஒரு வாரத்தில் அந்த சிறுவனுக்கு டிஸ்சார்ஜ் செய்ய அனுமதி அளிக்கப்படுகின்றது; தந்தையின் மருத்துவத்திற்காக நானும் சென்னையில் தங்கியிருக்கவே, நேரில் சென்று டிஸ்சார்ஜ் செய்து, காரில் அழைத்து சென்று கோயம்பேட்டில் பேருந்து ஒன்றில் ஏற்றிவிட்டு, நடத்துனரிடம் சொல்லி அனுப்பி வைக்கின்றேன்.

தந்தையும் நலம் பெற வீடு திரும்பிய ஒரு சில நாட்களில், அந்தச் சிறுவனை தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக செய்தி வருகின்றது; பார்க்க செல்கிறேன். உடல் நிலை மோசமடைந்து என் கண்களுக்கு நேராக அச்சிறுவனின் உயிர் மெல்ல மெல்ல அவன் உடலை விட்டு வெளியேறுகிறது; கண்களில் நீர் கசிய அந்த இடத்தை விட்டு வெளியேறிய ஒரு சில நிமிடங்களில் இரங்கல் செய்தி வந்தடைகின்றது.

தன்னார்வல அமைப்பு சார்பாக அனைவரும் முன் நின்று இறுதி சடங்கினை முடித்து வைக்கின்றோம்; அந்தப் பெரியவர் ஒரு சிறு உதவி வேண்டுகிறார்; சேதமடைந்த தன் இரும்பு பட்டறையை சீர் செய்து கொடுத்தால் தன் வாழ்வாதாரத்தை சரி செய்து கொள்வேன் என்ற கோரிக்கையை முன் வைக்கவே, அமைப்பு சார்பாக அதனை நிறைவேற்றினோம்.

இன்றும் அந்த கிராமத்தின் வழியே செல்லும் பொழுது, புதிய பட்டறையில் அந்த பெரியவர் இரும்படிக்கும் ஓசை கேட்கும்; தங்கள் எதிர்காலமாக வாழ்ந்த மூன்றாவது மகன் மறைந்து போக, மற்ற இரு மகன்களையும் பார்த்து கொள்வதற்காக இன்னும் அந்த இரும்படி ஓசை அங்கே கேட்கின்றது!

வசதி படைத்தவர்கள் கூட, மன வளர்ச்சி குன்றியவர்களை சுமையாக நினைத்து கருணைக் கொலை செய்யும் காலத்தில், எனது வயிற்று பிழைப்புக்காக உழைக்கும் பணத்தில் அந்த இரு ஜீவன்களை நான் இருக்கும் வரை காப்பாற்றுவேன் என உழைக்கும் அந்த பெரியவர் எனக்கு ஓர் கதாநாயகனே!!    

இங்கு யாவருடைய பெயரையும், ஊர்களின் பெயரையும் பெரும்பாலும் பயன்படுத்தவில்லை. ஏனெனில், எல்லோருக்கு அருகிலும் ஒருவர் இது போன்று உண்மை கதாநாயகர்களாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். உங்களால் உதவ முடியவில்லை எனினும், உடை, தோற்றம் வசதியை வைத்து யாரையும் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.

அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மால் ஒரு நாள் கூட வாழ முடியாமல் போகலாம்! 


-விஜயவர்மன் G.S

ஆசிரியர் - வணிகமும் வாழ்வும்



For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram YouTube

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞


Previous Post Next Post