நானும் என் வாசிப்பும் - ம.மணிவண்ணன்

 


நானும் என் வாசிப்பும்

பதின்மவயதுகளில் தொடங்கிய என் வாசிப்புப் பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. வாசிப்பின் பலன் எதுவெனக் கேட்டால் ஆழ்ந்த வாசிப்பு என்னை ஒரு படைப்பாளனாக்கியுள்ளது என்பேன் நான், ஆம் என்னை ஒரு கவிஞனாகவும் கட்டுரையாளனாகவும் ஆக்கியுள்ளது என் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம். வாசிப்பு என் அறிவை விரிவு செய்திருக்கிறது, மானிடப் பரப்பை நேசிக்கக் கற்றுத் தந்திருக்கிறது, பகுத்தறிவைச் சொல்லித் தந்திருக்கிறது, மனிதநேய உணர்வை வளர்த்து விட்டிருக்கிறது. என் வாசிப்பு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் சமத்துவத்தை, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சகோதரத்துவத்தை வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற அன்பு நெறியை, அறம் செய விரும்பு எனும் அறநெறியை என்னுள் விதைத்திருக்கிறது. நல்லதை வாசிப்போம், வாசிப்பை நேசிப்போம், வாசிப்பை சுவாசிப்போம்.எனக்கு மிகவும் பிடித்தமான நூல் எதுவெனக் கேட்டால் தந்தை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலைத்தான் சொல்வேன். ஆகச் சிறந்த பெண்ணிய நூல் அதுவென்பேன் நான். அது ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூலுமாகும். கற்பு, வள்ளுவரும் கற்பும், காதல், கல்யாண விடுதலை, மறுமணம் தவறல்ல, விபச்சாரம், விதவைகள் நிலைமை, சொத்துரிமை, கர்ப்பத்தடை, பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும் என இந்நூலில் இடம் பெற்றுள்ள தலைப்புகளோ மொத்தம் பத்து, ஒவ்வொன்றும் முத்து, அவை விலை மதிக்க முடியாத சொத்து.
நாம் இன்று பேசியும் எழுதியும் வரும் பெண்கல்வி, பாலின சமத்துவம், பெண்கள் விடுதலை, பெண்களுக்கு சொத்துரிமை, மறுமண உரிமை, மணமுறிவு உரிமை, கைம்பெண் கொடுமை, கருத்தடை இவை பற்றியெல்லாம் 1940 களின் தொடக்கத்திலேயே தந்தை பெரியாரால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது என்பதை நன்றாக விளக்குகிறது அவரது கட்டுரைகளின் தொகுப்பாக வந்திருக்கும் இந்த நூல். பெண்ணியம் என்றால் என்ன என்பதை எளிமையான மொழி நடையிலும் வாழ்வியல் ஆதாரங்களுடனும் தெளிவாக விளக்குகிறது இந்நூல். பெண்ணியம் குறித்த அடிப்படை அறிவும் புரிதலும் வேண்டுவோர்க்கு பெண் ஏன் அடிமையானாள் எனும் இந்நூல் மிகச் சிறந்த வழிகாட்டி என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

தந்தை பெரியாரல்ல ஆம் தந்தை பெரியாரல்ல, அவர் தாய் பெரியார். இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு பெண்ணும் இனி இப்படித்தான் அழைப்பார்கள் பெரியாரை. ஒவ்வொரு பெண்ணையும் தன் மகளாக நினைக்கக் கூடிய ஒருவரால்தான் இப்படி எழுத முடியும், பேச முடியும் செயல்பட முடியும்.

முதல் தலைப்பு கற்பு. கற்பு என்ற பெயரில் பெண்கள் எவ்வாறு அடிமைப் படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தோலுரிக்கிறது இந்தத் தலைப்பு. கற்பென்று ஒன்றும் இல்லை எனும் நம் பெரியார் கட்டமைக்கப்பட்ட புனிதங்களைப் போட்டுடைக்கிறார். பெண்களுக்கு எதிராக எப்போதும் எடுக்கப்படும் ஆயுதமான கற்பு என்ற சொல்லை விளக்க வரும் நம் பெரியார் வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து கடைசியில் அதில் ஒன்றுமே இல்லை என்பதையும், பெண்களை அடிமைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட ஓர் ஏற்பாடே கற்பு என்பதையும் நிறுவுகிறார். அவர் உரிக்க உரிக்க கலாச்சாரக் காவலர்களின் கண்களில் கண்ணீர் வருவதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டாவது தலைப்பு வள்ளுவரும் கற்பும். திருவள்ளுவரையும் விட்டுவைக்கவில்லை பெரியார். ஆண்கள் சார்ந்த அன்றைய சமூகத்தில் எழுதப்பட்ட திருக்குறள் பெண்களுக்கு எவ்வளவு பெரிய சங்கடத்தை உண்டாக்குகிறது என்பதை குறள்கள் மூலம் விளக்குகிறார் பெரியார். திருக்குறள் பேசும் பெண் அடிமைத்தனத்தை விளாசும் பெரியார் அதை அப்படியே இன்றைக்கும் பின்பற்ற தேவையில்லை என அறிவுறுத்துகிறார்.

மூன்றாவது தலைப்பு காதல். ஆசையை விட, அன்பை விட, நட்பை விட காதல் என்பதாக வேறொன்றும் இல்லை என்று பெரியார் சொல்லும் போது அதை ஏற்றுக்கொள்ள நம் மனது தயங்கினாலும் ஆழமாக யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதை மறுக்க முடியாது. காதலின் போலித்தனத்தை கூறும் பெரியார் அதே சமயத்தில் உண்மையான காதலுக்கு மரியாதையும் தருகிறார். கணவனும் மனைவியும் அன்பென்று சொல்லி ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவதை காதல் என நினைத்துக் கொள்வதையும் ஒரே காதல் என்பதையம் கேலி செய்கிறார் பெரியார்.

நான்காவது தலைப்பு கல்யாண விடுதலை. கல்யாணமென்பதே பெண்களை அடிமைப்படுத்த ஆண்களால் கொண்டுவரப்பட்ட கொடுமை என சினம் கொள்ளும் பெரியார் தாலி என்பது மாட்டிற்கு மூக்கணாங்கயிறு போல என கல்யாணம் என்ற அமைப்பின் போலியான புனிதத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார். கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்துவராத போது இருவரும் பிரிந்து தமக்கு விருப்பமானவரை கல்யாணம் செய்துகொள்வதே மனிதத் தன்மையுடைய சுயமரியாதையுள்ள அறிவுடைய செயல் என்கிறார் பெரியார்.

ஐந்தாவது தலைப்பு மறுமணம் தவறல்ல. மறுமணம் தவறல்ல என விளக்க வரும் பெரியார், மனதுக்கு பிடிக்காதபோது வாழ்க்கைத் திருப்திக்கும் இயற்கை இன்பத்திற்கும் பயன்படாதபோது, சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கத் தேவையில்லை என்கிறார். எத்தகைய சந்தர்ப்பங்களில் கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொள்ளலாம் என்பதை ஒன்பது காரணங்களோடு விளக்குகிறார் பெரியார்.

ஆறாவது தலைப்பு விபச்சாரம். யாரும் பேச யோசிக்கும் விபச்சாரம் என்பதை பேசு பொருளாக எடுத்துக்கொண்டு அதைப் பற்றி விளக்குகிறார் பெரியார். கற்பு என்பது எவ்வாறு பெண்களை அடிமைப்படுத்தக் கொண்டுவரப்பட்டதோ அதைப்போலவே விபச்சாரம் என்பதும் பெண்களை அடிமைப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்கிறார் பெரியார். விபச்சாரம் செய்வதால் ஏற்படுவதாகச் சொல்லப்படும் ஒழுக்கக் குறைவு பெண்களுக்குத்தான் இருக்கிறதே தவிர ஆண்களுக்கு ஏன் அவ்வாறு கிடையாது என கேள்வி எழுப்புகிறார் பெரியார்.

ஏழாவது தலைப்பு விதவைகள் நிலைமை. விதவைகள் மறுமணத்தை தடுப்பது உடன்கட்டை ஏற்றுவதை விட கொடுமையானது எனும் பெரியார் உடன்கட்டை ஏறுவது ஒருநாள் துன்பம் விதவையாய் வாழ்வது வாழ்நாள் துன்பம் என விதவைகளுக்காக கண்ணீர் வடிக்கிறார். விதவைகள் வாழ் சூழல் இயற்கையானதல்ல, எளியாரை வலியார் அடக்கியாண்டு துன்புறுத்துவதேயாகும் என்கிறார் பெரியார். தன் தங்கையின் மகள் விதவையான போது, அவருக்குத் தான் மறுமணம் செய்து வைத்ததை விளக்கும் போது, தந்தை பெரியாரல்ல அவர் தாய் பெரியார் என்ற உண்மை புரிகிறது.

எட்டாவது தலைப்பு சொத்துரிமை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என வாதாடுகிறார் பெரியார். பெண் அடிமையானதற்கான பல காரணங்களில் சொத்துரிமை இல்லாதது மிக முக்கியக் காரணம் என்கிறார். பெண்கள் சொத்துரிமை அனுபவிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறுவது மிகப்பெரிய கொடுமையும் அநீதியுமாகும் என கோபம் கொள்ளும் பெரியார் பெண்களுக்கு சொத்துரிமை இருந்தால் அவர்கள் வாழ்க்கை மேன்மை அடையும் என பெண்களுக்காக அக்கறையோடு வாதாடுகிறார்.

ஒன்பதாவது தலைப்பு கர்ப்பத்தடை. பெண்கள் பிள்ளைகளை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் அல்ல எனும் பெரியார் அவர்களுக்கென்று தனியான உணர்வுகளும் வாழ்வியல் விழைவுகளும் உண்டு என்கிறார். பெண்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு வாழ்கைக்கும் தடையாய் இருப்பது கர்ப்பமே என்று ஆணித்தரமாய் கூறுகிறார் பெரியார். பெண்களின் உடல் நலன் பாதிப்படைவதற்கும் விரைவிலேயே முதுமை நிலை அடைவதற்கும் வாழ்நாள் குறைந்து இளம் வயதிலேயே மரணமடைவதற்கும் காரணம் கர்ப்பமே எனவே பிள்ளை பெறுவதை பெண்கள் கட்டாயம் நிறுத்த வேண்டும் என பெண்களை வேண்டுகிறார் பெரியார்.

பத்தாவது தலைப்பு பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும். ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்படாதவரை பெண்களுக்கு விடுதலை இல்லை என உறுதியாகக் கூறுகிறார் பெரியார். ஆண்களால் பெண்களுக்கு ஒருபோதும் விடுதலை கிடைக்காது எனும் பெரியார் பெண்கள் விடுதலைக்காக ஆண்கள் பாடுபடுவதாகக் காட்டிக் கொள்வதெல்லாம் ஏமாற்று வேலை என்கிறார். பெண் மக்கள் அடிமையானது ஆண்களால்தான் எனவும் பெண்கள் அடிமையாக இருப்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கே கேடானது எனவும் பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தினால்தான் ஆண்மை என்ற தத்துவம் ஒழியும் பெண்கள் விடுதலை அடைய முடியும் என ஆணித்தரமாக விளக்குகிறார் பெரியார்.

பெண்ணியம் குறித்த அறிவும் புரிதலும் பெற வேண்டும் எனத் தேடல் உள்ளவர்கள் இச்சிறு நூலை ஊன்றிப் படித்தால் நிச்சயம் தெளிவு பெறலாம். பெரியார் பேசியது பாலியல் விடுதலை என்பதும் கட்டற்ற பாலியல் அல்ல என்பதும் நன்கு விளங்கும்.

 

-ம.மணிவண்ணன்


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

Previous Post Next Post