நானும் என் வாசிப்பும் - அ. ஜெ.அமலா

 


நானும் என் வாசிப்பும்

என் வாழ்வில் பொன்னியின் செல்வன்

"புத்தக வாசிப்பிற்கு ஈடு இணையான இன்பம் வேறு எதிலும் இல்லை"

    நான் பிறந்து வளர்ந்தது காவிரிக் கரையின் அருகிலுள்ள ஒரு சிற்றூர். பள்ளிப் படிப்பை எனது ஊரிலே நிறைவு செய்தேன். கல்லூரிப் படிப்பை காவிரிக் கரையின்  மாநகரத்தில்  உள்ள  புகழ்பெற்ற  பெண்கள் கல்லூரி ஒன்றினில் தான் நிறைவு செய்தேன்.

அப்போதெல்லாம் கல்கியின், "பொன்னியின் செல்வன்" என்கிற வார்த்தை அவ்வப்போது காதில் விழும். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு இதெல்லாம் நல்ல புத்தகங்கள், படித்தால் நன்றாக இருக்கும் என சொல்வார்கள் என் அக்காக்களும், அண்ணன்களும். ஆனால் அதை எப்படி வாங்குவது? எப்படி படிப்பது? எங்கு படிப்பது என்றெல்லாம் தெரியவில்லை. இத்தனைக்கும் புத்தகங்கள் படிக்க படிக்க வீடு, வீடாகச் சென்றவள் நான்.அம்புலிமாமா படிக்க ஒரு வீடு, பாலமித்ரா படிக்க ஒரு வீடு, ரத்னா, பூந்தளிர் , கோகுலம் படிக்க ஒரு வீடு, ராணி, பாக்யா, குங்குமம் , குமுதம், விகடன்,  இதையெல்லாம் படிக்க ஒரு வீடு, எங்கள் ஊரிலே இருந்த ஒரு படிப்பகத்தில் கிடைக்கிற சிறிய சிறிய புத்தகங்கள், கடையில் பொட்டலம் கட்டி தருகின்ற பேப்பரை கூட விட்டு வைக்காமல் படிக்கின்ற ஆள் நான். அப்படிப்பட்ட என் கண்ணிலிருந்து "கல்கி ஐயாவும், பொன்னியின் செல்வனும் மறைந்தே இருந்தார்கள்.பிறகு வேலை, திருமணம் , குழந்தை என்றானது. திருமணத்திற்கு பிறகு இணையரின் விருப்பத்தின் பேரில் B.Ed படிக்க சென்றேன். 2011 ஆம் ஆண்டு அது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாணவப்பருவ வாழ்க்கை. கல்லூரி எப்படி இருக்குமோ; உடன் படிப்பவர்கள் எப்படி இருப்பார்களோ; ஆசிரியர்கள் இல்லையில்லை  "பேராசிரியர்கள்"  எப்படி இருப்பார்களோ என்று தயக்கமும், அச்சமும், திகைப்புமாய் முதல் நாள் கல்லூரிக்குச் சென்றேன்.

ஆனால், என் தயக்கத்தையும், திகைப்பையும், அச்சத்தையும் நீக்கி ஒரு புது உலகமாக விரிந்தது என் கல்லூரி. எனக்கு அமைந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்திறமையுடன் என்னைக் கவர்ந்தனர். இந்த இந்த பாடங்களுக்கு இவர் தான் என பிரிக்கப்பட்டு வகுப்புகளும் இனிதே துவங்கின.Educational Psychology என்கிற பாடப்பிரிவிற்கு திருமதி. R.N. ஷகிலா தேவி அவர்கள் தான் பேராசிரியர். கடந்த ஆண்டுகளுக்கும் அப் பாடப் பிரிவை அவர் தான் நடத்தியுள்ளார். எங்களின் சீனியர் அக்காக்கள் சொல்லியது என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. Psychology mam தான் ரொம்ப கண்டிப்பானவர்; வகுப்பறையில் ஒரு சிறிய தவற்றைக் கூட அனுமதியாதவர்; ஒழுங்கீனச் செயலில் ஈடுபடும் மாணவர்களை வகுப்பறையின் வெளியே நிறுத்திடுவார்; ஒப்படைப்புகளை சொன்ன தேதியில் அவர் எப்படி சொன்னாரே, அதே மாதிரி ஒப்படைத்தால் தான் ஏற்றுக் கொள்வார் என்று. இப்படியெல்லாம் கூறியதால் அவர் மீது மிகுந்த பயம் இருந்து கொண்டேயிருந்தது.

ஆரம்ப வகுப்புகளும் அப்படியே போயின. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல என் வகுப்பு இளவல்களின் இனிமையான அணுகுமுறையினால் அவரின் அணுகுமுறையில் நல்ல மாற்றங்கள் தெரிந்தன எங்களுக்கு.

அப்படி ஒரு நாள் (என் வாழ்வின் வசந்த நாளாக, மிக முக்கிய நாளாக மாறும் என்று நினையாத நாளது) 30.9.2011 அன்று உளவியல் செயல்பாடுகளில் ஒன்றான நினைவுத்திறன் பற்றிய பாடம் நடத்திக் கொண்டிருந்த போது பொன்னியின் செல்வனிலிருந்து நந்தினி கதாபாத்திரத்தை மேற்கோள் காட்டி விளக்கினார்.

"நல்ல புத்தகம் ஒன்று தானே தேடி வரும்"

என்கிற வார்த்தை உண்மையாகியது எனக்கு. திறந்தன என் ஆர்வக் கண்கள். இதற்கு மேலும் இதைப் படிக்காமல் இருக்க கூடாது எப்படியாவது வாங்க வேண்டும் என தீர்மானித்தேன்."என் எண்ண அதிர்வலைகள்" "கல்கி ஐயாவிற்கும் அவரின் பொன்னியின் செல்வனுக்கும்" எட்டி விட்டது போலும்.....

நாங்கள் வசித்த ஊருக்கு அருகிலுள்ள ஒரு பெரிய ஊரில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதாக தெரிந்து கொண்டேன். நானும் என் இணையரும்  16.10.2011 அன்று சென்றோம் அப் புத்தக கண்காட்சிக்கு.  நுழைவாயிலின் வழியே உள்ளே நுழைந்தவுடனே முதலில் என்னை வரவேற்றார்கள்  ..ஆம்.. ..அவர்களே  தான்    "பொன்னியின் செல்வன்"  அப்படியே ஒரு Set ஆக 1, 2 - ஒரு புத்தகம் 3, 4 - ஒரு புத்தகம், 5 வது ஒரு புத்தகம் என 3 புத்தகங்கள் அப்படியே கட்டி வைத்திருந்தனர். என் இணையரிடம், எனக்கு இதை மட்டும் வாங்கித் தாங்க. புடவை வேண்டாம் என்றவுடன் சிரித்துக் கொண்டே, வாங்கிக் கொள் , புடவையும் வாங்கலாம் என்றார். (என்னே! ஒரு இனியவர்)  அகமும், புறமும் ஒன்று சேர்ந்து மலர என் கைகளில் அப் புத்தகங்களை ஏந்திய அக் கணம் தெரியாது....... இனி என் வாழ்வில் நிறைய இனிய மாற்றங்களை பொன்னியின் செல்வன் ஏற்படுத்துவார் என்று..

மிக மிக பரவசமாய் அன்றிரவு (16.10.2011)  திறந்தேன்  முதல் புத்தகத்தை, முதல் தொகுதியில், முதல் அத்தியாயத்தை ....  அந்தத் தொடரை எழுத ஆரம்பித்த வருடத்திலிருந்து  900 வருடங்களுக்கு முன்பு பயணிக்கலாம் என்று சொல்வார் கல்கி ஐயா. அப்படியெனில் நான் ஆரம்பித்த இரவின் கணக்குப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முந்திய பயணமாக அமைந்தது எனக்கு.வாசிக்க, வாசிக்க அப்படியே  ஒரு இன்ப உலகத்திற்குள், என் சோழ தேசத்திற்குள் நுழைந்தேன் .என் ஊருக்கு அருகிலுள்ள "அன்பில்" வழியே போய் கீழப்பழுவூர், மேலப்பழுவூருக்குச் சென்று அங்கிருந்து அப்படியே திருமானூர், திருவையாறு சென்று, அய்யம்பேட்டை, பாபநாசம் , குடந்தை என சென்று இறுதியில் தஞ்சைபுரியை அடைந்தேன்.

நான் யாரென்று எனக்கே நினைவில்லாத சிறு பிராயத்தில் தஞ்சை அரண்மனையை சுற்றி பார்த்த பொழுது, அங்கிருந்த ஒரு குளியல் தொட்டியில் தவறி விழுந்தது; என்னை காணாது என் அம்மா, அப்பா, அம்மாச்சி தேடி தவிக்க ; யதார்த்தமாய் தொட்டிக்குள் எட்டிப் பார்க்க; நான் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அனைவரும் பதறியடித்து தூக்கி காப்பாற்றியது எல்லாம் என அடிமன நினைவடுக்குகளிலிருந்து மேலே வந்தது. ஒருவேளை அன்றே நான் மடிந்திருந்தால் சோழ தேசத்திலே புதைக்கப்பட்டு சோழப்பரம்பரையின் முன்னோர்களுடன் நானும் கலந்திருப்பேன். ஆனால், இதையெல்லாம் நான் மீண்டும் இன்று  நினைத்துப் பார்க்க வேண்டும் என்று இருந்திருக்கும் போல .... அதனாலே அன்று பிழைத்தேன் நான்.

 


படிக்க, படிக்க நான் பணி செய்த இடங்கள் ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தன. திருவையாறு , கும்பகோணம், நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கோயில், நாகப்பட்டினம் பழைய கடற்கரைக்கு எதிரேயுள்ள லூர்து மாதா ஆலயத்திற்கு தான் வாரா வாரம் சென்றேன் நான். இந்த நாவலுடன் பார்த்தால்  அவ்விடம் தான் சூடாமணி விஹாரம்  இருந்திருக்கும் போல ஏனெனில் கடலில் அலைகள் பொங்கி வருவதை தலைமை புத்த குரு பார்ப்பதாய் வருமே. இப்படியாக ஒவ்வொரு கணமும் , ஒவ்வொரு வார்த்தையும் என்னுள் திரும்ப, திரும்ப பல நினைவுகளை ஏற்படுத்தியது.

நாகப்பட்டினத்திலிருந்து வேதாரண்யம் செல்கின்ற பாதை தற்பொழுது தார்ச்சாலையாக இருக்கின்றது. ஆனாலும் தார்ச்சாலைக்கு அருகிலேயே நீரோட்ட பாதை ஒன்று செல்வதாய் எனக்கு தோன்றும். இந்த நாவலைப் படிக்கின்ற பொழுது தெரிந்து கொண்டேன். அது உண்மை தான் என்றும், அவ்வழியே படகில் நந்தினியும் , பழுவேட்டரையரும் படகில் செல்வது, பூங்குழலி , சேந்தன் அமுதன் இணை பொன்னியின் செல்வனைக் காப்பாற்றி தாழைப் புதர்கள் அடர்ந்திருந்த அவ்வோடையில் சிறு படகில் சென்று  சூடாமணி விஹாரத்தில் பத்திரமாய் சேர்த்த பொழுது என் உடல் சிலிர்த்தது. நாகப்பட்டினம் புதிய கடற்கரை, வேளாங்கண்ணி கடற்கரை வேதாரண்யம் கடற்கரை,  கோடியக்கரை கடற்கரைகளிலெல்லாம் என் தோழிகளுடன் அளவளாவியது இன்று போலவே இருக்கிறது  எனக்கு.இப்படியாக,  "பொன்னியின் செல்வன்" என்னை முழுவதுமாக ஆக்கிரமித்தார். என் இரவுகள் அனைத்தும் அந்த புத்தகத்துடனே கழிந்தது. ஒரு வாரத்தில் முடித்தேனா, 10 நாட்களில்  முடித்தேனா என்று நினைவில்லை. ஆனால் படித்து முடித்தேன். பிரமிப்பாக இருந்தது. இப்படி ஒரு எழுத்து, இப்படியொரு புத்தகம் எழுத முடியுமா என்று. என் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் நான் சோழ தேசத்துக் காரி என்கிற பெருமிதத்தால் நிறைந்தது. நானும் அரச பரம்பரை (சற்று அதிகமோ) குறைந்த பட்சம் சோழப்படையில் இருந்த ஒரு காவலாளியின் வம்சமாக கூட இருக்கலாம் என்று நினைத்தேன். அந்த அளவிற்கு என் ஊனோடும், உயிரோடும் கலந்தது என்னுள்.பின், கல்லூரியில் ஒரு நாள் என் பேராசிரியரிடம் இதைப்பற்றி சொன்னேன். அவர் மிக மகிழ்ந்து, அப்படியா!  அந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு வாம்மா.... நான் மீண்டும் படிக்கின்றேன் என்று சொன்னார். நான் எடுத்துக் கொண்டு அவரிடம் தந்த போது என்னுடன் பயிலும் இளவல், "அக்கா எப்படிக்கா இதையெல்லாம் படிக்கிறீங்க? பாடப்புத்தகம் படிக்கவே நேரமில்லை எங்களுக்கு என்று கேட்டார். நான் சிரித்தேன். ஆர்வம் மட்டும் போதும் தம்பி. எதையும் படிக்கலாம் என்றேன். என் பேராசிரியரும் அதை ஆமோதித்தார்.

என் ஆர்வத்தைக் கண்ட தோழி ஒருவர், பார்த்திபன் கனவு புத்தகத்தைத் தந்தார் என்னிடம். அன்றிரவே படித்து முடித்து விட்டு அடுத்த நாள் அவரிடம் தந்தேன். எப்படி பா இத்தன வேகமா படிக்கிறீங்க என்று வினவினார். அவருக்கும் அதே புன்னகையைத் தான் விடையாய் தந்தேன்.பொன்னியின் செல்வனின் மீதான என் அடங்கா ஆர்வத்தைக் கண்ட என் இணையர், அவர் நண்பரிடம் பொன்னியின் செல்வனின் மீதான என் வியப்பை சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் " பொன்னியின் செல்வனை" ஒலிப்புத்தகமாக அனுப்பி வைத்தார். எங்களுடைய கணினியில் பதிவு செய்து,  கேட்க ஆரம்பித்தேன். நானே வாசித்து சிலாகித்தது ஒரு இன்பமெனில், ஒலிப்புத்தகமாக கேட்டது மற்றொரு வகை இன்பமாக இருந்தது. அதிலும் நந்தினிக்காக குரல் கொடுத்த பாத்திமா பாபுவின் குரலைக் கேட்ட பொழுது பாத்திமா பாபு மறைந்து  நந்தினியாகவே நினைத்தேன். என் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்து கொண்டாள் நந்தினி. மிக, மிக நேர்த்தியான வடிவமைப்புடன், துல்லிய ஒலி அமைப்புடன், அசாத்திய உழைப்பை நல்கி ஒரு அழகிய சிற்பமாகவே பொன்னியின் செல்வனை உருவாக்கியிருந்தார் அதை இயக்கி தயாரித்த திரு. பாம்பே கண்ணன் அவர்கள்.(வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்)          இப்படியாக நான் படிப்பது, கேட்பது எல்லாமே பொன்னியின் செல்வனாகவே  இருந்தது மிக மிக  மிக அற்புதமான அனுபவம். நிறைய நாட்கள் இரவில் தனியே நின்று கொண்டு வானத்தைப் பார்த்திருக்கின்றேன். சந்திரன் உதயமாகிற  நேரம் எப்படி இருக்கிறது; மின் விளக்குகள் இல்லாத அந்த காலம் எப்படி இருந்திருக்கும்; முழுமதி நாளில் நிலவின் ஒளியை அணு அணுவாக இரசித்து மகிழ்ந்தேன் நான். தோழிகளிடம் இதைப் பற்றி சொன்ன போது பைத்தியமாகி விட்டேன் என கிண்டல் செய்வது கூட எனக்கு மகிழ்வையேத் தந்தது.

         இப்படி என்னுள்ளே பல இனிய மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டேயிருந்த பொன்னியின் செல்வனை மேடை நாடகமாக சென்னையில்  நடத்த போகிறார்கள் என்று ஆனந்த விகடனில் ஒரு செய்தியும் , அதைத் தொடர்ந்து நிறைய போட்டிகளும் அறிவித்தார்கள். அனைத்தையும்  ஆர்வமாய்  பார்த்தேன். ஒரு பக்கம் ஆனந்தம்; மற்றொரு பக்கம் துயர்; என் மனதில்  இருக்கின்ற வந்தியத்தேவனையும், குந்தவையையும், பொன்னியின் செல்வனையும் திரையில் காட்ட முடியுமா என்று..... ஆனாலும் மனதினுள் ஒரு இனம் புரியா களிப்பு. அவர்கள் கொடுத்திருந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசினேன். சென்னை போன்ற மாநகரங்களில் மட்டுந்தான் நடத்துவீர்களா? எங்கள் ஊருக்கு வர மாட்டீர்களா என்று? அவர்கள் அதற்கு பெரிய அரங்கம் தேவை, நிறைய பொருட்செலவு ஆகும், நிறைய Sponsers தேவை என்றெல்லாம் சொல்லி அதனால் முதலில் பெரிய நகரங்களில் போடுகிறோம் என்றனர். நான் யாரென்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று எனக்கு தெரியாது. ஏதோ ஒரு உந்துதலில் தான் தொலைபேசினேன். அந்த உந்துதல் பொன்னியின் செல்வன் அன்றி வேறென்ன ?    இதெல்லாம் இன்ன  உணர்வு என்று என்னால் வார்த்தையால் விளக்க இயலவில்லை.

          பிறகு ஒரு நாள் யதேச்சையாக ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெட்டிச் செய்தியைப் பார்த்தேன். பார்த்ததும் கண்கள் விரிந்தன. இது உண்மையா? இது எப்படி? என்று ஆச்சரியமடைந்தேன். தஞ்சையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் திரு. தங்கம் அவர்கள் பொன்னியின் செல்வனை சித்திரக்கதை வடிவில் எழுதி வருகிறார் அதன் விலை ரூ.200/- என்றும். 5 தொகுதிகள் எத்தனை விவரங்கள், ..... நாடி, நரம்பு, இரத்தம், தசை, புத்தியெல்லாம் பொன்னியின் செல்வனால் ஊறிய ஒருவரால் தான் இம்முயற்சி சாத்தியம் என்று உடனே பதிவு செய்து அப்புத்தகத்தையும் வாங்கினேன். ஐயாவிற்கு ஒரு கடிதமும் எழுதினேன். ஐயாவும் அவரது துணைவியாரும் என்னிடம் பேசினார்கள். என் தஞ்சை அனுபவத்தை அவரிடமும் பகிர்ந்தேன். தஞ்சைக்கு வரும் போது அவரது இல்லத்திற்கு நான் வர வேண்டும் என்று அவர்கள் அழைத்தது என் வாழ்வில் என்றும் மறக்க இயலாத பொற் கணம். யாரென்றே அறியாத முன்பின் அறிமுகம் இல்லாத இருவரை , இரு குடும்பங்களாக இணைத்து வைக்கின்ற அதிசய பாலமாய் " பொன்னியின்  செல்வன் மட்டுமே.

         பொன்னியின் செல்வன் என்னுள்ளே இப்படியாக பல பல இனிய நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டேயிருந்த அந்த நாட்களிலேயே என் கல்லூரிப் படிப்பையும் (B.Ed) நிறைவு செய்து அரசு அறிவித்த தேர்வில் கலந்து கொண்டு தேர்வையெழுதி, அதில் தேர்ச்ச்சியும் பெற்றேன். என்னுடைய '2வது , 'குழந்தையும் நல்ல படியே பிறந்தாள். அவள் என் வயிற்றில் கருவாக உருவம் பெற்ற நாளிலிருந்து நான் மீண்டும் பொன்னியின் செல்வனை வாசித்து காண்பித்தேன் அவளுக்கு.

         இன்று என் இரு குழந்தைகளும் வந்தியத்தேவன், குந்தவை, ஆழ்வார்க்கடியான், அருள்மொழி, ஆதித்தன், பழுவேட்டரையர் என்றெல்லாம் சர்வ சாதாரணமாக பேசி மகிழ்கின்ற பொழுதில் சோழ தேசத்தின் தாயாக அகமகிழ்ந்து போகின்றேன்.

        இன்றும் என் தனிமையைப் போக்குகின்ற சிறந்த ஒன்றாக பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் இருக்கின்றது. கைகள் வீட்டு வேலைகளைச் செய்தாலும் என் மனம் பொன்னியின் செல்வனில் தான் ஒன்றியிருக்கும்.

       பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பற்றி ஒன்றும் கூறவில்லையே என்று தோன்றலாம் .

"தேனில் எந்தத் துளி சுவை மிகுந்தது என யாரேனும் சொல்வார்களா?"

"வானிலிருந்து பொழிகின்ற அமுதத்துளியில் எந்தத் துளி பயன் மிகுந்தது என யாரேனும் சொல்வார்களா?"

"காவிரி ஆற்றின் மணலில் இந்த துகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என யாரேனும் வகைப்படுத்த இயலுமா" (கடந்த கோடை விடுமுறையில் நாங்கள் குடும்பமாய் தஞ்சைக்குச் சென்று அனைத்தையும் பார்த்து மகிழ்ந்த அதே வேளையில் பாளம் பாளமாய் காய்ந்து கிடந்த கல்லணையைக் கண்டு இரத்தக் கண்ணீர் தான் விட்டேன்.) (மணல் கொள்ளையர்களுக்கு மிக வசதி) "பல வண்ணங்களால் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலையில் இந்த மலரை எனக்கு பிடிக்கவில்லை என யாரேனும் சொல்வார்களா?"

அது போலவே ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நேரத்தில் என் சிந்தையைக் கவர்ந்தவர்களாய் , என் கண்முன்னே நடமாடுபவர்களாய் எக் காலத்திற்கும்  நித்திய இளமையுடன்  வாழ்கின்ற அவர்களை எப்படி விட முடியும்?

            இப்படியாக என் வாழ்வில் ஒரு சிறு துளியாக என் காதில் விழுந்து இன்று ஆனந்த வெள்ளமாக என்னுள் பிரவாகித்து என் குடும்பத்தினருடன் ஒன்று கலந்து

"காலத்தை வென்ற காவிய நாயகனாய்" என்னுள் இல்லையில்லை எங்களுக்குள்ளே அழியா அரியணையிட்டு அமர்ந்துள்ளனர் கல்கி ஐயாவும், அவரால் சாகாவரம் பெற்ற பொன்னியின் செல்வனும்.

என்றுமே அழியாத அவர்களுக்கும், அவர்களை எனக்கு அறிமுகப்படுத்திய என்னுடைய  உளவியல்  பாட பேராசிரியர் திருமதி. R.N. ஷகிலா தேவி mam க்கும்

என் வாழ்வின் இனிமையான நாட்களை மீண்டும் ஒரு முறை  நினைக்க வைத்த உங்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்களையும், நன்றிகளையும் உரித்தாக்கி நிறைவு செய்கின்றேன்.

 

 என்றும் அன்புடன்,

   அ. ஜெ.அமலா.

பட்டதாரி ஆசிரியர்

திருவண்ணாமலை மாவட்டம்For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 -Receiver Team📞 


Previous Post Next Post