நானும் என் வாசிப்பும் - P.கஸ்தூரி திலகம்

 


நானும் என் வாசிப்பும்

 

வாசிப்பு என்பது ஒரு வாழ்வியல்; ஓர் இன்பம்: ஓர் ஆச்சர்யம்; ஒரு  கலை; ஒரு சுகமான உணர்வு; ஒரு இனிய பழக்கம்; ஆகச்சிறந்த அனுபவம்! அதை வாசிப்பவர்கள்  மட்டுமே உய்த்துணர்வர். மனதினில் அதற்கான முனைப்பு இருக்க வேண்டும். ஒரு நல்ல புத்தகம் படிக்கும் போது பசி, தாகம் தோன்றாது.  வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். அத்துடன் ஒன்றிவிடுவோம். அந்த வாசிப்பின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதே பெரும் மகிழ்ச்சி தரும். புத்தகம் எந்த மொழியில் இருந்தாலும் அதை வாசிக்கும் போது அடையும் இன்பத்திற்கு எல்லையேயில்லை. அதை வாசிக்கும் போது ஏற்படும் அனுபவமே தனி. எல்லையற்ற பெருவெளியில் இயற்கையோடு கலந்து நாம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருவதே வாசிப்பு. அந்த சுகானுபவத்தை அப்படியே விளக்க இயலுமா என்பதும் முடியாத ஒன்று. வாசிப்பு  என்ற ஒன்று இல்லையெனில் வாழ்க்கை முழுமையாகாது.  அதில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தனி அனுபவத்தை விளக்குவதைவிட உணர்வது எளிது.

 


எனது வாசிப்பின் ஆசான் என் தந்தையே. சிறு வயதிலேயே ஆன்மீகப் பாடல்களை மனனம் செய்யப் பயிற்றுவித்தவர் அவர். ஆண்டாளின் திருப்பாவை முப்பதும் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை இருபதும் வாசித்து மார்கழி  முப்பது நாட்களும் நானும் என் சகோதரிகளும், காலையில் பாட வேண்டும். என் வாசிப்பு அங்கே துவங்கியது. தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார்களின் பாடல்களையும்  வாசிக்கத் தூண்டியவர் அவரே. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவள்ளலாரின் திருவருட்பாவையும் அறிமுகப்படுத்தி இன்றளவும் மறக்காமல் நானிருக்க காரணகர்த்தாவும் என் தந்தையே! புத்தகங்கள் படித்தால்  அறிவு வளரும், உலகம் புரியும் என்ற அவர் கருத்தினால் தான், நான் இன்று வாசிக்கும் பேரானந்தத்தைப் பெற்றுள்ளேன் எனில் அது மிகையல்ல. என் சிறு வயதிலிருந்தே இறைப் பாடல்களில் ஆரம்பித்த என் வாசிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து படரத் தொடங்கியது. அதையும் தவிர மற்ற நூல்களும் வாசிக்க உண்டு என எனக்கு உணர்த்தியவர்கள் எனது ஆசிரியப் பெருமக்களும் எனது தமக்கையும் தான். எனது ஆசிரியர்கள் பாடங்கள் தவிர கொஞ்சம் வெளியிலும் உள்ள வாசிப்பு சுவையைக் கற்று கொடுத்தார்கள். என் தமக்கையோ தனது விருப்பக் கதைகளைப் படித்து அதை சுவைபட எனக்கு விவரிப்பாள். அது என் வாசிப்பிற்கான  ஆர்வத்தை தூண்டியது. வாசிப்பின் மீது பற்றும், காதலும் வரத் தொடங்கியது. அக்காபொன்னியின் செல்வன்படித்துக் கொண்டிருந்தாள். நானும் கல்கியின்பொன்னியின் செல்வனில்வாசிப்பை ஆரம்பித்தேன். கதை சுவையுடன் இருந்தது மட்டுமே அப்போது விளங்கியது. மற்ற நுணுக்கங்களை நான் வளர்ந்து மீண்டும் அதனைப் படிக்கும் போதுதான்  புரிந்து கொண்டேன்.

 

பின்னர் சில காலம்  வகுப்பறைப் பாடங்களை முழுமையாக வாசித்தேன். துணைப்பாடங்களில் வரும் கதைகள் என்னைக் கவரத் தொடங்கின. கதை படிப்பது பேரின்பமாக இருந்தது. பள்ளி இறுதி நாட்கள் வரும்போது எனக்குப் பல எழுத்தாளர்களின் அறிமுகம்,  புத்தகங்கள் மூலம் கிடைத்தது. மு..வின் புத்தகங்கள் நெஞ்சைத்தொடும். ‘கள்ளோ காவியமோ’ ‘நெஞ்சில் ஒரு முள்’ ‘அல்லிஆகியவை மிகச் சிறந்த நாவல்கள். மணிவண்ணன் எனும் நா.பார்த்த சாரதியின்குறிஞ்சிமலரும் பொன்விலங்கும்என் மனதை விட்டகலாத கதைச் சித்திரங்கள்.

 

பூரணியும் அரவிந்தனும், பாரதியும் என் மனதில் சப்பணமிட்டு உட்கார்ந்து விட்டார்கள். புதுமைப்பித்தனின்சித்தியும் , கடிதங்களும் தமிழின் சிறப்பு. லா.சா.ராவின் கதைகள் எனில் அப்படி பிடிக்கும். ‘கோபல்லபுரத்துகி.ராஜநாராயணன் இலக்கிய வரலாற்றின் மைல் கல்லாக வாழும் மனிதர். தினசரி செய்தித்தாள்களை விடாமல் படித்து விடுவேன். மாத வார இதழ்களையும் விட்டதில்லை.  ஆனந்த விகடனும், கல்கியும், மஞ்சரியும், கலைமகளும் எனக்கு உற்ற துணையானார்கள். கதைகளையும் மற்ற கட்டுரைகளையும் படித்த பின்னர் அக்காவுடன் விவாதிப்பேன். 

 


பின்பு கல்லூரியில் நிறைய வாசிக்க ஆரம்பித்தேன்.  நம்மை சுற்றி என்ன நடக்கிறது என நமக்கு அறிமுகப்படுத்துவதே பல்சுவை நூல்கள் தானே? அப்போதும் கதைகளை விடுவதில்லை. அகிலனின்சித்திரைப் பாவையும்பாவை விளக்கும்என் நெஞ்சம் கவர்ந்தவை. பாவை விளக்கின் முடிவைப் படித்து தேம்பி, தேம்பி அழுததும் உண்டு. சிறுகதைகளும் எனக்குப் பிடித்தவைதான். எஸ்..பி.அண்ணாமலை,  ரா.கி.ரங்கராஜன், ஆர்.சூடாமணி,  ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, வாசந்தி, அனுராதா ரமணன், மகரிஷி, இந்துமதி, ஜே.எம்.சாலி ஆகியோரின் கதைகள் என்னை வேறோர் உலகத்திற்கு அழைத்துச்  சென்றன. ஜெயகாந்தனின் சிறுகதைகளும் நாவல்களும் நான் வசித்து வியந்த ஒன்று. சிந்தனைக்குரிய  பல்வேறு விஷயங்களை சுவைபட சிறிது  நையாண்டி கலந்து எழுதுவதில் அவருக்கு நிகர் அவர்தான். தி.ஜானகிராமனின் ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகை. ‘மலர் மஞ்சம்’ ‘மரப்பசு’, ‘உயிர்த்தேன்’ ‘செம்பருத்திஆகியவை ஜீவனுள்ளவை. அவரதுமோகமுள்எனைக் கவர்ந்த புத்தகங்களில் ஒன்று. பாலகுமாரனின்மெர்குரிப்பூக்களும்அனுராதா ரமணனின்சிறையும் ஆகச்சிறந்த கதைகள். ஆசிரியர் சாவியின் கதைகளும் மெரினாவின் சிரிக்க வைக்கும் எழுத்தும் மறக்க முடியாதவை.

 

வாசிப்பு என்பது கதைகளில் மட்டும் அடங்கி விடுவதில்லை. கவிதைகளும், கட்டுரைகளும் நிறைந்தவையே. கவிதை என்றதும் பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசன்,வைரமுத்து, நா.முத்துக்குமார் ஆகியோரும் நினைவுக்கு வருகின்றனர். பாரதியின்கண்ணம்மாபாடல்களும், விடுதலைத்தீயை விதைத்த பாடல்களும் நம்மோடு பின்னிப் பிணைந்தவை. ’அக்னி குஞ்சொன்று கண்டேனில் அந்த மீசைக்காரனின் ஆக்ரோஷம் தெரியவில்லையா? ‘கண்ணின் கடைப் பார்வை காதலியர் காட்டிவிட்டால்’... என்பதில் காதலும், ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குஎனும் கவிதையில் மொழிப்பற்றும் கொண்டவை பாரதிதாசனின் கவிதைகள். அடடா! கண்ணதாசனைப் பற்றி கேட்கவே வேண்டாம். திரைப்பாடல்கள் அன்றி, தனிக் கவிதைகளும்,  ஆன்மீக நூல்களும் தமிழனின் மிகப் பெரிய சொத்து. வாசிக்க, வாசிக்க இன்பம்.

 

ஆதாரம் ஒன்றையொன்று அண்டிநிற்க வேண்டுமென்று

ஓர் தாரம் கொள்ளுகிறோம்; உடனிருந்து வாழுகிறோம்

சேதாரம் என்றாலும் சேர்ந்து விட்ட பின்னாலே

காதோரம் அன்புசொல்லி கலந்திருந்தால் குற்றமில்லை

 

எனும் கவிதையை எத்தனை முறை வாசித்திருப்பேன்! அவரின் ஆன்மீக நூல்கள் என் மதத்தைஅர்த்தமுள்ள இந்து மதமாகஎனக்குப் புரிய வைத்தது. வைரமுத்துவின்காதலித்து பார்என்பது போதையூட்டும் ஒரு கவிதை! திரைப்பாடல்களோ சொல்லொணாப் புதுமைவாய்ந்தவை. தான் வாழ்ந்த குறுகிய காலத்தில் நா.முத்துக்குமார் எழுதிய ஏராளமான திரைப்பாடல்களும்அணிலாடும் முன்றில்போன்ற கட்டுரைகளும் சிறப்பானவை. அவரின் இழப்பும், பெரிய இழப்பு!   எஸ்.  ராமகிருஷ்ணனின் சிறு கதைகளும் பயணக்கட்டுரைகளும் வாசிப்பவருக்கு தூண்டுகோல். கல்யாண்ஜி எனும் கவிஞன் வண்ணதாசன் எனும் கதை சொல்லியாக மாறி இரண்டும் கலந்த ஒரு வண்ணக்  கலவையாக மிளிர்கிறார். இவர்களின் பன்முகத்தன்மைகள்  எனது வாசிப்புக்குத் தீனி! சம கால கவிஞர்களில் வெய்யில்  எழுதும் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். ‘ஒரு பியானோ அழுகிறதுஎன்று சந்திரபாபு வின் கதை சொல்லிய கவிதை என்னை உருக வைத்தது. மண் மணம் மாறா தமிழச்சி (சுமதி) யின்  கவிதைகளும், கட்டுரைகளும் எனக்குப் பிடித்தவையே. ‘வனப்பேச்சிஎனக்குச் செல்லம். அத்தனைக்கும் ஆசைப்படச் சொன்ன வெள்ளியங்கிரி சத்குருவின் ஆனந்த அலையும், மாமனிதர் அப்துல் கலாமின்அக்னிசிறகுகளும் வாசிக்க வாசிக்க உற்சாகம் பெருகும்.

 

          என் வாசிப்புக்கு மொழி ஒரு தடையே அல்ல. ஆங்கிலப் பேராசியராக இருந்த எனக்கு ஆங்கில கதைகளும், கட்டுரைகளும் படித்தே ஆக வேண்டிய கட்டாயம். நிறைய எழுத்தாளர்களைப் பிடிக்கும். பாடத்திற்காகப் படித்தேனா அல்லது ரசிப்பதற்காகப் படித்தேனா என்றால்அதுவும் உண்டு; அல்லதும் உண்டு”. சிட்னி ஷெல்டனின்ரேஜ் ஆப் ஏஞ்செல்ஸ்படித்து அழுதவள் நான். டாஃப்னியின் கதைகள்ரெபெக்கா’, ‘மை கசின் ரேச்சல்போன்றவை ஆக இஷ்டம். என் முனைவர் பட்டத்திற்காக பன்முகத் தன்மை கொண்டராபர்ட்பென்  வாரனின்  நூல்கள் எல்லாவற்றையும் பட்டத்திற்காக அன்றி விரும்பியே படித்தேன். ‘.ஜே.கிரானின்முதல் இன்றையமாயா ஆஞ்சலோவரை எதையும் விடவில்லை. தமிழ் இலக்கிய வரலாறு மட்டுமின்றி, ஆங்கில இலக்கிய வரலாற்றையும், இங்கிலாந்தின் சமூக வரலாற்றினையும், அமெரிக்காவின் உள்நோட்டு போரையும் விரும்பி வாசித்தேன். ஐந்து ஆண்டுகள் கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியாவில் பணி நிமித்தம் இருந்த போது ஆப்பிரிக்க இலக்கியமும் பரிச்சயமே. சினுவா அச்சபெயின்திங்ஸ்  பால் அபார்ட்என்பதும் ஜேம்ஸ் குகியின் கவிதைகளும் ஆகப் பிடிக்கும். இந்திய எழுத்தாளர்களின் நூல்களும் நான் விரும்பி வாசிப்பவையே.

       

சமீபத்தில் எனக்கு மிகுந்த ஆறுதல் தருபவை நூல்களே. நல்ல நூல்களை வாசிக்கப் பெறுபவர்கள் பாக்கியவான்கள் எனில், இந்த எழுத்தறிஞர்களால் நானும்! தற்போது வெளிவந்த திரு.சு. வெங்கடேசனின்வீரயுக நாயகன் வேள்பாரிஎன் மனதை மிகவும் கவர்ந்த நாவல்.  இறையும், இயற்கையும்  கலந்து நம்மை வரலாற்றுக் காலத்தின் பறம்பிற்கு அழைத்துச் செல்லும் அருமையான புத்தகம். வாழ்வியலும், அரசியலும் இயற்கை சார்ந்த இயலும் கொண்ட இந்த நாவல் ஒரு பொக்கிஷமே.  

 

வாசிப்பு என் ஊனிலும், உயிரிலும் கலந்தது. இறுதி மூச்சு வரை வாசிக்க வேண்டும். முன்பே சொன்னாற்போல வாசிப்பு ஒரு இனிய அனுபவம். என்னை  வாசிக்க வைத்த என் தந்தைக்கும், அந்த அனுபவம் தந்த என் ஆசிரியப் பெருமக்களுக்கும். குறிப்பாக பல்வேறு நூலாசிரியர்களுக்கும் என் மானமார்ந்த நன்றி. வாசியுங்கள்! வாசியுங்கள்! நிறைய வாசியுங்கள்.  அது ஒரு தனி உலகம். அங்கே நீங்களும் உங்களின் உணர்வுகளும் மட்டுமே கோலோச்சும், ஒரு இனிய அனுபவம் கிகைக்கும். வாசிப்பு உங்களை சிந்திக்க வைக்கும்.

 

வாசிப்பே என் வாழ்க்கை!

 

          P.கஸ்தூரி திலகம்


For our regular updates follow us in social media platforms.

Facebook   Twitter  Instagram

தங்கள் வருகைக்கு நன்றி🙏

 

-Receiver Team📞

நானும் என் வாசிப்பும் - P.கஸ்தூரி திலகம் நானும் என் வாசிப்பும் - P.கஸ்தூரி திலகம் Reviewed by receiverteam on February 23, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.